க ுருவி கட்டும் கூட்டுக்குள்ளே குண்டு வைத்தவன்
குறுங்கதை

கனாட்ப்ளேஸின் லார்ட் ஆஃப் தி ட்ரிங்க்ஸ் என்ற அந்த ரெஸ்ட்ரோ-பப் (Restro-Pub) ஹர்யான்வி பாடல்களால் நிறைந்து வழிந்துகொண்டிருந்தது. அங்கிருந்த ஒவ்வொரு மேஜையிலும் இளம் வயது ஆண்களும் பெண்களுமாய், நான்கோ அல்லது ஐந்தோ பேர்கள் அமர்ந்திருந்தார்கள். பால்பேதமின்றி அவர்கள் எல்லோரும் மதுவைத் தொடர்ச்சியாகப் பருகிக்கொண்டிருந்தார்கள். ஒலித்துக்கொண்டிருந்த பாடல்களின் பெருத்தச் சத்தத்தோடு போட்டி போட்டுக்கொண்டு அவர்கள் பேசிக்கொண்டிருந்ததில் அந்த அதிநவீன பார் ஒரு சந்தைக்கடையைக் காட்டிலும் அதிக சத்தமாக இருந்தது.
இந்தக்கால இளைஞர்கள் காது ஜவ்வு கிழிந்துவிடும் அளவில் இசை அதிரும் பாடல்களைத் தான் விரும்பிக் கேட்கிறார்கள் என்பதற்கு அந்த பார் நல்லதொரு அத்தாட்சியாக அந்நேரம் இருந்தது.
நான் தனியாளாய் அந்த பாருக்குள் நுழைந்தபோது அமர இடம் கிடைக்குமா என்று சுற்றிமுற்றிப் பார்த்ததில், ரெஸ்ட் ரூமிற்கு வழிகாட்ட தொங்கிக்கொண்டிருந்த அம்புக்குறிக்குக் கீழே, இரண்டு பேர் அமர வசதியிருந்த ஒரு மேஜையில் ஒருவன் தனியனாகக் குடித்துக்கொண்டிருந்ததைப் பார்த்து அந்த மேஜையை நோக்கிப் போய், அவன் காதருகே குனிந்து,
“இங்கே நானமர்வதில் உங்களுக்கேதும் பிரச்சினை உண்டுமா” என நுனிநாக்கு ஆங்கிலத்தில் கேட்டேன்.
அவன் என்னை நிமிர்ந்து பார்த்து, இந்த பார் (உலகம்) யாவருக்குமானது. நீங்கள் தாராளமாய் அமர்ந்துகொள்ளலாம் என்று சுத்தத் தமிழில் பதில் சொன்னான்.
இவனொரு பச்சைத் தமிழன் என்று என் நெற்றியில் ஒரு முத்திரை குத்தியிருக்கிறதென்பதை இந்த தில்லி மாநகரில் அத்தனை பேரும் சுலபமாகக் கண்டுபிடித்துவிடுகிறார்கள். என்னால்தான் அப்படி அவனைக் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது. சிரித்துக்கொண்டே அவனுக்கு எதிரேயிருந்த காலி நாற்காலியில் அமர்ந்து, மேஜை மேஜையாய்ச் சுற்றிக்கொண்டிருந்த ஒரு பேரரை அழைத்து ஒரு எல்ஐஐடீ (Long Island Ice Tea)யும் கூடவே நொறுக்குத் தீனியாக பனீர் டிக்காவும் சிக்கன் டிக்காவும் ஆர்டர் செய்தேன்.
கடைசியில் டீயில் முடிவடைவதால் எல்ஐஐடீயை தேநீர் வகை பானமென்று என்று நினைக்க வேண்டாம். அது பலவித மதுபானங்களின் கலவையான ஒரு காக்டெயில். வோட்கா, ஜின், ஒயிட் ரம், டெக்கீலா, ரெட் வொயின் கூடவே பேரிக்காய் மற்றும் எலுமிச்சம்பழத்தின் சிரப்புகள் கொண்டு தயாராகும் அந்த காக்டெயிலுக்கு கிட்டத்தட்ட நூறு வருட பாரம்பரியமுண்டு.
என்னுடைய அமெரிக்கப் பயணத்தின் பலனாய் இந்த எல்ஐஐடீ என்னுடன் தொற்றிக்கொண்டுவிட்டது. நியூயார்க்கில் இருக்கும் லாங் ஐலேண்ட் தீவின் பிரத்தியேக காக்டெயில். தில்லியில் ஒன்றிரண்டு பார்களில்தான் ஓரளவு தரமான எல்ஐஐடீ கிடைக்கப் பெற்றிருக்கிறேன். அதில் இந்த லார்ட் ஆஃப் தி ட்ரிங்க்ஸும் ஒன்று. மற்ற பார்களில் பெரும்பாலும் கொக்கோகோலாவைக் கலந்து ஒப்பேற்றிவிடுவார்கள்.
மெதுவாக இரசித்து இரசித்துப் பருக வேண்டிய பானம் எல்ஐஐடீ. மிடறு மிடறாய் அருந்துகையில் துணுக்குத் துணுக்காய் சுருசுருவென போதை தலைக்கு ஏறும். சில நாட்களில் ஒன்றுக்கு மூன்று மடங்கு காசு வாங்கிக்கொண்டு நமது கோப்பை, காலியாகக் காலியாக நிரப்பிக் கொண்டே இருப்பார்கள். மூன்றாம் முறை நிரப்பப்படும் போது உங்கள் நிதானம் உங்கள் வசம் கண்டிப்பாக இருக்கவே இருக்காது.
இன்றைக்கும் அப்படியொரு ரீ-ஃபில் நாள்தான் என்று பேரர் என்னிடம் சொன்னபோது, அன்றைக்கு நான் மூன்று ரவுண்டுக்கு மேல் போகப் போகிறேன் என்பது அப்போதைக்குத் தெரியாமல் இருந்ததினால், மறுத்துவிட்டேன்.
பேரர் என்னுடையை ஆர்டரை எடுத்துக்கொண்டு எங்கள் மேஜையைவிட்டு நகர்ந்தவுடன், ஏற்கனவே அங்கமர்ந்து குடித்துக்கொண்டிருந்த அவன் என்னிடம்
நீங்கள் கேட்டவற்றை அந்த பேரர் கொண்டுவந்து தருவதற்கு குறைந்தது பத்து நிமிடங்களாவது பிடிக்கும். அதற்குள் நாம் ஆளுக்கொரு சிகரெட்டைப் பிடித்துவிட்டு வருவோமா என்று நெடுநாள் பழகிய நண்பனைப் போல கேட்டான்.
இந்த மதுப்பிரியர்களே இப்படித்தான். அவர்களால் மட்டும்தான் முன்பின் அறிமுகமில்லாதவர்களுடன் கூட சட்டென நட்பு பாராட்டிவிட முடிகிறது. நான் புகைப்பவனா இல்லையா என்று கூட தெரியதுதானே அவனுக்கு. ஆயினும் அத்தனை உரிமையுடன் அழைத்தான் அவன். நான் புகைபிடிப்பவன்தான். இருவரும் மேஜயிலிருந்து எழுந்து போகுமுன் அங்கேயிருந்த மற்றொரு பேரரிடம் மேஜை எங்களுடையது. வேறு யாரையும் ஆக்கிரமிக்க அனுமதித்துவிடாதே என்று சைகை மூலம் சொல்லிவிட்டு, வாஷ்ரூமை ஒட்டியிருந்த ஸ்மோக்கிங் ரூமிற்குப் போனோம்.
அங்கே ஏற்கனவே ஐந்தாறு பேர் புகைத்துக்கொண்டிருந்தார்கள். மிகச்சிறிய கண்ணாடி அறை. மேலே ஒரு புகை உள்வாங்கி குறைவான வேகத்தில் சுழன்றபடி இருந்தது. அதனால் உள்ளே நுழைந்த யாரும் தனியாகப் புகைபிடிக்காமலேயே புகைபிடித்த திருப்தியைத் தருமளவிற்கு சிகரெட்டுப் புகை அந்த அறைக்குள் மண்டிக்கிடந்தது. இருந்தாலும் அவன் தன்னிடமிருந்த ஒரு சிகரெட்டுப் பாக்கெட்டைத் திறந்து என்னிடம் நீட்டினான்.
விலையுயர்ந்த வெளிநாட்டு சிகரெட் பாக்கெட் அது. அதிலிருந்து நான் ஒன்றை உருவியெடுத்து உதடுகளுக்கு நடுவில் பொருத்திக்கொண்டேன். அவனும் ஒன்றை தன் கையில் எடுத்து அதை வாயிலும் செருகிக்கொண்டான். லைட்டரில் தீயுண்டாக்கி முதலில் எனக்கு நீட்டியதில் அவன் கடைபிடிக்கும் நம் தமிழ்நாட்டு விருந்தோம்பல் குணம் மிளிரிற்று. சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்ட நான், அவனைப் பார்த்து ஒரு சிறு புன்னகையோன்றை உதிர்த்துவைத்தேன்.
தன் சிகரெட்டைப் பற்றவைத்து நீண்ட இழுப்பை இழுத்து, புகையை வெளியிட்டவன் என்னிடம்,
பாவத்திலேயே பெரிய பாவம் எது தெரியுமா. பறவை கட்டின கூட்டைக் கலைக்கிறதுதான். என்று சொன்னான். இதற்கு என்ன பதில் சொல்வதென்றே எனக்குத் தெரியவவில்லை.
அதனால் நான் அமைதியாக இருக்க, அவனே தொடர்ந்து பேசினான்.
நான் அந்தப் பாவத்தை இப்ப ரெண்டாவது தடவை செஞ்சுட்டேன் என்றான்.
எந்தப் பறவையாவது உங்க வீட்டுக்குள்ளே வந்து கூடு கட்டிருச்சா.. என்று நான் கேட்டேன்.
அவன் சிரித்தபடி சொன்னான். “இட்ஸ் அ மெட்டாஃபோர்”. மேலும் அவன் சொன்னான்.
“ஒத்தைக்கொத்தையா பொறந்த ஒரு பொண்ணை, தங்களோட வறுமையிலேயும் கஷ்டத்திலேயும் ஆசையாசையாய் வளர்த்த பொண்ணை, அந்த அப்பா அமாவுக்குத் தெரியாமலேயே காதலிச்சு, அவங்க ரெண்டுபேருமே இல்லாம, ஒரு ரெஜிஸ்டராஃபீஸ்ல வைச்சு திருட்டுக் கல்யாணமும் பண்ணிக்கிட்டப்ப மொதத் தடவையா ஒரு குருவிக் கூட்டைக் கலைச்சிட்டேன்.
சரி,, காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்ட பொண்ணையாவது சந்தோஷமா வைச்சிருந்தேனா அதுவும் இல்லை. அதனால தன்னைச் சிரிக்க வைச்ச, தன்னைச் சந்தோஷமா உணர வைச்ச அவங்க கூட வேலை பாக்குற ஒரு ஃப்ரண்டு மேல அவங்களுக்கு காதலாயிடுச்சு. அது காதலா இல்லை வேற என்னதுமான்னு கூட எனக்குத் தெரியல. இருந்தாலும் என்னோட பொறாமையால, அவங்க ரெண்டு பேரையும் பிரிச்சப்ப இரண்டாவது தடவையா. இந்த தடவை வெறுமனே கூட்டை கலைக்கலை. குண்டு வைச்சே தகர்த்திட்டேன்னு நினைக்கேன்.”
என்று சொன்னவன், பிடித்துக் கொண்டிருந்த அந்த பாதி சிகரெட்டை கீழே போட்டு மிதித்துவிட்டு, ஸ்மோக்கிங் ரூமை விட்டு வெளியேறி, தான் அமர்ந்திருந்த மேஜையில் பாதி குடித்து, மீதி வைத்திருந்த அரைக் கோப்பை மதுவை ஒரே மடக்காய் குடித்துவிட்டு, பர்ஸிலிருந்து ஐந்தாறு ஐநூறு ரூபாய் நோட்டுக்களை மேஜை மேல் வைத்துவிட்டு, பாரின் வெளிக்கதவை நோக்கி வேகமாய் நடந்தான்.