கொலை விரோதம்
குறுங்கதை

கொஞ்ச நாளாகவே அவன் பெயரைக் கேட்டாலே எனக்கு எரிச்சல் எரிச்சலாக வருகிறது. இத்தனைக்கும் அவனோடு எனக்கு எந்தப் பிணக்கும் இல்லை. தினசரி அவனை நான் பார்ப்பது கூடக் கிடையாது. அவன் இருப்பது வேறொரு திசை என்றால் நான் இருப்பது அதற்கு நேரெதிர் திசை. ஆயினும் அவன் பெயரை யாராவது ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் என்னிடம் சொல்லவோ அல்லது அவன் பெயர் என் கண்ணில் பட்டுவிடும்படியோ செய்துவிடுகிறார்கள்.
சில சமயங்களில் இப்படித்தான் எதனோடாவது அல்லது யாருடனாவது ஒரு விரோதம் வந்துவிடுகிறது. எந்தவொரு காரணமும் இன்றி, தான் தோன்றியாக வந்துவிடும் அந்த விரோதம் நாளடைவில் நாம் நீரூற்றி வளர்க்கும் தொட்டிச் செடி மாதிரி நாளுக்கு நாள் புதுப்புது இலைகளோடு துளிர்த்துத் துளிர்த்து தழைத்துச் செடி கொடியாகிக் கொடி மரமாகி நமக்குள் ஆழமாக வேரூன்றிவிடுகிறது.
மனதில் தோன்றும் குரோதங்களை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும். இல்லையேல் பிற்பாடு அவற்றைப் பிடுங்கி எறிவது மிகவும் கடினமாகிவிடும் என்று அந்தக் கோயிலில் காலட்சேபம் செய்தவர் ஒரு நாள் சொன்னார். எல்லாருக்கும் ஏற்கனவே தெரிந்த கதையை தினசரி காலட்சேபமாக சொல்லுகிறவரை மக்கள் தேடி வந்து கேட்க வேண்டுமானால், இப்படி ஏதாவது ஒரு தத்துவச் சாரத்தை கதைக்கு இடையிடையே சொல்ல வேண்டிய கட்டாயத்தை அவர் அறிந்திருக்க வேண்டும்.
நான் கோயிலுக்குப் போவதையுமோ, காலட்சேபம் கேட்பதையுமோ செய்கிறவனே இல்லை. அவன் தான் இதையெல்லாம் சிரமப்பரிகாரமாகச் செய்பவன். அவனுக்குப் பிடிக்கும் என்பதினாலேயே கூட நான் இவற்றிலிருந்தெல்லாம் விலகி வந்துகொண்டிருக்கிறேன் என்று எண்ணுகிறேன்.
ஆனாலும் எத்தனை தூரம் ஒரு விஷயத்திலிருந்து விலகியே இருக்கவேண்டுமென்று நாம் பிடிவாதமாக இருக்கிறோமோ நம்மை அறியாமலேயே அத்தனை தூரம் நாம் அந்த விஷயத்தை நோக்கியே சென்று கொண்டும் இருக்கிறோம் என்று எனக்கும் அவனுக்குமான பொதுவான நண்பர்கள் ஞாபகப்படுத்திக்கொண்டே இருந்தார்கள்.
வர வர நீ அவனைப் போலவே உடை உடுத்துகிறாய் என்கிறார்கள் சில நாள். வேறு சில நாட்களில் நான் பேசுவதும், நடப்பதும் திரும்புவதும் எல்லாம் அவனைப் போல இருக்கிறதென்கிறார்கள்.
ஒரு வேளை அவன் மேல் நான் கொண்ட விரோதத்தை நான் திரும்பத் திரும்ப யோசித்துக் கொண்டிருக்கும் போதெல்லாம் நான் அவனை நோக்கி சென்று கொண்டிருக்கிறேனோ என்ற ஐயம் எனக்குள் மெல்ல எழ ஆரம்பித்தது.
அந்த ஐயம் மேலோங்கி வரும் நாட்களிலெல்லாம் எனக்குள் ஒரு குரல் ஓங்கி ஒலித்தது.
உனக்குள் இருக்கும் அவனைக் கொன்றுவிடு. அது முடியாத பட்சத்தில் அவனையாவது.
தொடர்ந்து அந்தக் குரல் என்னை வற்புறுத்திக்கொண்டே வந்ததினால்தான் நான் தற்கொலை செய்துகொண்டேன்.