top of page

துணை

குறுங்கதை

துணை

தீடீரென மயக்கம் வந்துவிட்டது. நின்ற இடத்திலேயே தரை வேகமாக சுற்றுவது போல காட்சி மயக்கம் தோன்ற கண்ணிரண்டும் சொருகி, பிடிமானத்துக்கு கைக்குத் தோதாய் ஏதும் அகப்படாமல் நின்ற நிலை தடுமாறியவனை, முந்தைய தினத்தில் பார்க்க வந்து இன்னும் தன் வீட்டுக்குப் போகாத, மகள் சட்டெனத் தாங்கிப் பிடித்ததில், விழாமல் தப்பித்தேன்.

இதுனால தான் சொல்றேன்.. தனியா இருக்காதேப்பான்னு கேக்குறியா.. என்ன பிடிவாதம் இது. நேத்தைக்கு வீட்டுக்கு போக முடியாம மழையா பெஞ்சதில இங்கேயே தங்க வேண்டியாதிருச்சு, அதனால இப்ப ஒன்னைய விழாமப் புடிச்சிட்டடேன். தனியா விழுந்து கெடந்திருந்தேன்னா.. நெனைக்கவே பயம்மா இருக்குப்பா.

சில நிமிடங்களுக்கு பின் நினைவு திரும்பிய போது பக்கத்தில் இருந்த மகள் கண்ணீரோடு சொன்னாள்.

சரிம்மா.. அழாதே.. அதான் ஒன்னும் ஆகலைல்ல.. அந்த BP மாத்திரையை நேத்தைக்குப் போட மறந்துட்டேன். அதான். இனிமே தெனமும் மறக்காம போட்டுர்றேன்.

யாரு.. நீ தானே.. என் தலை மறைஞ்சதும் நீ பழையபடிக்கு நினைச்சா மாத்திரை போடுறது இல்லைன்னா அப்படியே இருக்கிறதுன்னு ஆயிடுவ.. இதெல்லாம் சரிப்பட்டு வராது. நீ கெளம்பு என்னோட.. எப்பயும் எங்கண்ணு முன்னாலேயே இரு.

எப்படி.. உங்க வீட்டுல வந்து இருந்தாலும் நீ வேலைக்கு போயிட்டு வர்ற வரைக்கும் தனியாத் தான இருக்கனும் .. இல்லை தெனமும் ஓங்கூடவே கிளம்பி ஒன்னோட ஆபீஸுக்கும் வரணுமா..

நான் சொல்வதின் அர்த்தம் புரிந்த மகள் பேசாமல் இருந்தாள்.

இப்படி எதுனா காரணஞ்சொல்லி தனியாவே இரு. என்னைக்கு நீ எஞ்சொல்பேச்சு கேட்ட நீ. எக்கேடும் கெட்டுப் போ. இப்ப கெளம்பு. ஒரு நடை டாக்டர்கிட்ட போயிட்டு வந்துரலாம். அப்புறமா நான் கிளம்பி வீட்டுக்குப் போயிட்டு ஆபீஸ் போறேன்.

இருவரும் டிபன் முடித்ததும், அவள் என்னுடைய மாத்திரைகளை எடுத்துத் தர நான் அவற்றை முழுங்கியதும் ஆட்டோ பிடித்துக் கொண்டு டாக்டரிம் போனோம்.

என்னம்மா.. திரும்பவும் அப்பாவுக்கு மயக்கம் வந்திருச்சா.. மிஸ்டர் அறிவுநாயகம்.. ஒழுங்கா நேரா நேரத்துக்கு மாத்திரைகளையெல்லாம் சாப்பிடுறீங்களா இல்லையா.. வாக்கிங் போகச் சொன்னேனே போறீங்களா.. என்னது அதுவும் ரெகுலாரா இல்லையா.. என்னம்மா இது இப்படி இருக்கார். சார்.. நீங்க தினசரி வாக்கிங் போகனும். அப்படி வாக்கிங் போறப்ப நேக்கடா போங்க..

நான் அதிர்ச்சியில் "டாக்டர் ..." என்று சத்தமாக கத்த.. அருகிலிருந்த மகள்..

"யப்பா.. நீ வேற.. டாக்டர் சொல்றது கேட்ஜெட்ஸ் எதிவுமில்லாம.. போனில்லாம.. கையில ஸ்மார்ட் வாட்சில்லாம.. காதில இயர்பட்ஸ் இல்லாம.."

இந்த டாக்டர்கள் எப்போதும் இப்படித்தான். சொல்ல வர்ற விசயத்தை நேரடியாக நோயாளிகள் விளங்கிக் கொள்கிற மாதிரி சொல்வதேயில்லை.

கடைசியில் என்னுடைய BP மாத்திரையின் டோஸை கூட்டி மாத்திரையெழுதிக் கொடுத்த டாக்டர் தன்னுடைய ஃபீஸின் டோஸேஜையும் கூட்டி வாங்கிக் கொண்டார்.

வெளிய வந்த நான், மகளிடம்..

ஒனக்கு ஆபீஸுக்கு லேட்டாயிருச்சு.. நீ இப்படியே கெளம்பு. நான் பத்திரமா வீட்டுக்குப் போயிருவேன்..

கொண்டு போய் விட்டுட்டுத்தான் போறேனே.. நீ தனியாத்தான போகனும்.

உன் அம்மா போனப்புறம் நான் எப்பவுமே தனியாளுதாம்மா.. அதனால ஒன்னுமில்லே.. நீ போயிட்டு வா..

அவளுக்கு கண்ணில் மீண்டும் நீர் கோர்த்தது.

யப்பா நான் ஒன்னு சொன்னா கோச்சிக்க மாட்டியே..

பீடிகை போட்ட மாதிரி ஆரம்பித்து.. கொஞ்சம் இடைவெளி விட்டு பேசத் தொடங்கினாள்..

நான் ரொம்ப நாளா யோசிச்சுட்டுத்தான் இருக்கேன்.. நீ வேணா இன்னோரு கல்யாணம் பண்ணிக்கிறயா. ரொம்ப சீரீயஸா கேக்குறேன்.. ஒன் வயசுல.., ஒரு விடோவோ இல்லை கல்யாணமே பண்ணிக்காதவங்களோ, பாத்துக்குறத்துன்னு ஆளே இல்லாம தனியா இருக்குறவங்களா பாத்து.. வேற எதுக்கும் இல்லைன்னாலும்.. சும்மா ஒரு பேச்சுத் துணைக்காச்சும்.. இப்படி ஒடம்பு சரியில்லாம போறப்ப ஒருத்தருக்கு ஒருத்தரு ஒத்தாசையா இருக்குறதுக்காச்சும்.. கல்யாணம்ன்னு கூட வேண்டாம்.. சும்மா ரூம் மேட் மாதிரி.. ஒரே வீட்டுல ஒன்னா தங்கியிருக்குற ஃப்ரண்ட்ஸ் மாதிரி.. அவங்க லேடியாத்தான் இருக்கனும்ன்னு கூட கட்டாயமில்ல..

யோசிப்பா..

என்று சொல்லி, ரோட்டில் காலியாய் வந்த ஆட்டோவை கை காட்டி நிறுத்தி அதில் ஏறிப் போனாள்.

நான் அவள் போன திசையையே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன்.

CONTACT

Tel: 9810488582| Tel: 7011144631 | sureshbarathan@gmail.com

Sign Up for Stay Connected

Thanks for submitting!

Follow me:

  • Black Facebook Icon
  • Black Twitter Icon

© 2022 by Suresh Barathan

bottom of page