நிகம்போத்
குறுங்கதை

யமுனை நதியோரத்தின் நிகம்போத் சுடுகாட்டுப் படித்துறையில் அமர்ந்திருந்தேன். பின்னால் யாரோ ஒருவரை எரித்துக் கொண்டிருந்தார்கள். இறந்தவரை கொண்டு வந்தவர்கள் சுடுகாட்டுக் காரியங்களெல்லாம் முடிந்த பின்னர் தத்தம் காரணங்களுக்குத் திரும்பிப் போய்விட்டார்கள். இப்போது அந்தப் பிணம் அநாதையாகத் தான் எரிந்து கொண்டிருந்தது.
ஒவ்வொரு மரணமும் ஒவ்வொரு படிப்பினையை வழங்கும். ஆனால் எல்லா சுடுகாடுகளைம் ஒரேயொரு அறிவைத் தான் மனிதனுக்குத் தருகின்றன. அதனால் தானோ என்னவோ இந்த சுடுகாட்டுக்கு நிகம்போத் என்று பெயரிட்டிருக்கிறார்கள். அப்படியென்றால் அறிவை உணர்தல்( Realization of the Knowledge) என்று அர்த்தம். இப்போதைக்குச் சுடுகாட்டில் இருந்தாலும் கூட நான் எந்த அறிவையும் உணரும் மன நிலையிலில்லை.
யமுனை நதி நம்மூர் நதிகளைப் போல, சுழித்துக் கொண்டெல்லாம் ஓடுகிற நதியல்ல. மேலே உத்திராகண்டில் பெருமழையடித்து அந்த மழைவெள்ளமும் சேர்ந்துக் கொண்டு ஓடும் அந்தக் கொஞ்ச நாட்களுக்கு மட்டும் தான் சுழிகளையெல்லாம் பாரக்கலாம். மற்ற நாட்களில் மிக மிக அமைதியாக ஓடும் நதி யமுனை. அந்த அமைதியிலிருந்து கொஞ்சத்தையேனும் நானும் பெற முடியுமா என்றுதான் அந்தப் படிகட்டில் வந்து வந்தமர்ந்திருந்தேன். நதியில் இல்லாத சுழிகளும் இரைச்சல்களும் எனக்குள்ளே அப்போதிருந்ததன. எதிலுமே நிலைகொள்ளாமல் கரையில்லாத ஆற்றைப் போல எங்கெங்கோ ஓடிக் கொண்டிருந்தது என் மனம். இத்தனைக்கும் யார்க் காரணம் என்று யோசிக்கும் போது மேலும் கோபம் வந்தது. உள்ளுக்குள் இரைச்சல் இன்னும் அதிகமாயிற்று.
பிணத்தை எரிக்கும் மரக்கட்டைகளில் ஒன்று தீயின் வெப்பத்தில் வெடித்ததா இல்லை பிணத்தின் எலும்புகள் தான் வெப்பந்தாளாமல் வெடித்தனவா என்று வேறுபடுத்தி அறிய முடியாதவொரு சத்தம் கேட்டது. நான் திரும்பிப் பார்த்தேன். பிணத்தை எரிப்பவர்கள் ரொம்ப அமைதியாக இருந்தார்கள். திறந்த மேனியனாயிருந்த அதிலொருவர் தன்னுடைய கன்னத்தெலும்பும் , விலா எலும்புகளும் எக்கித் தெறிக்குமளவுக்கு களிமண்ணில் செய்யப்பட்ட கை ஹூக்காவை வாயில் வைத்து அதில் கனன்று கொண்டிருந்த கஞ்சாவை நீண்ட இழுப்பு இழுத்து, பெரிய வெள்ளைப் புகை மண்டலத்தை தன் வாய் வழியேயும் மூக்கு வழியேயும் வெளியிட்டார். பின் கண்களை மெல்லச் சுருக்கி மூடிக்கொண்டு தனக்குள்ளேயே அமிழ்ந்து போனார். தரமான கஞ்சா போலிருக்கிறது. எனக்கிருக்கும் மனக்கிலேசத்துக்கு அவரிடம் சென்று ஒரேயொரு இழுப்பை இலவசமாக வாங்கி இழுத்துவிட வேண்டும் போல இருந்தது.
அதுவொரு திரிசங்கு. போனால் மீள முடியாது தெரியுமா உனக்கு..
ஒரு குரல் என்னுடைய இடப்புறத்திலிருந்து வந்தது. யாரெனத் திரும்பி பார்த்தேன். நல்ல வயதான, ஆனால் திடகாத்திரமான ஒருவர் படித்துறையிலிருந்து யமுனையில் இறங்கிக் கொண்டிருந்தார். நான் அவரையே உற்றுப் பார்த்தேன். இவர் திரிசங்கென எதைச் சொன்னார்.. அதை என்னிடமா சொன்னார் ஏன் சொன்னார். என்ற கேள்விகளெல்லாம் எனக்குள் எழுந்தன.
நதிக்குள் மூழ்கியிருந்த கடைசிப் படிக்கட்டில் முழங்கால் முங்க நின்ற அவர் என்னைப் பார்க்காமலேயே
ஆமாம். உன்னிடம் தான் சொன்னேன். கண்மூடி நினைவிழந்து போய் அவனிருக்கும் அந்த திரும்பவே முடியாத திரிசங்கை நீ இரவலாய்க்கூட கேட்க நினைக்காதே. அது விடுதலையல்ல. சிறை.
அதோ எரிந்து கொண்டிருக்கிறானே, அவனும் விடுதலையை விரும்பித் தான் விசமருந்திச் செத்துப் போனான். அவனுக்கு அவன் மனைவி மீது கொள்ளைப் பிரியம். அந்த பிரியமே அவளைச் சந்தேகிக்க வைத்தது. இப்போது யாருக்கு விடுதலை கிடைத்தது நீ சொல் பாரக்கலாம்.
என்று கூறி நிறுத்தியவர் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி நின்றார்.
உனக்குள்ளே கலங்கிக் கொண்டிருப்பதும் ஒரு நாள் தெளியும். கலங்கலாய் இருக்கிறதே என்று வருந்தும் நீதான் அது தெளிந்த பின்னர் அய்யய்யோ இத்தனை தெளிவாய் இருக்கிறதே என்று பதறவும் செய்வாய். ஆனால் எதுவுமே நிரந்தமில்லை என்பது தான் இந்த நிகம்போத் படித்துறை உனக்களிக்கும் செய்தி.
அதனால் எல்லாவற்றையும் கழற்றி வைத்து விட்டு வந்து தண்ணீரில் முங்கியெழு. இந்த நதி நீர் உன்னை உள்ளேயும் வெளியேயும் சுத்தமாக்கும். என்று சொன்னவாறே தண்ணீருக்குள் மூழ்கினார்.
எனக்கு என்ன செய்வதென்று தெரியாமல் அவர் நீர்மட்டத்துக்கு வருவதற்குக் காத்திருந்தேன். வெகு நேரமாகியும் அவர் வராமல் போகவே, அணிந்திருந்த எதையுமே கழற்றாமல் ஆற்று நீருக்குள் பாய்ந்து குதித்து அவரைத் தேடினேன். கடைசி வரை அவர் எனக்கு கிடைக்கவேயில்லை.