பூனையின் சாபம்
குறுங்கதை

மூன்று பேர் அமரும் வசதியான இருக்கையில், என் கண்களை மூடிய நிலையில் நான் மட்டும் கால் நீட்டிப் படுத்திருந்தேன். எதிரில் இருந்த முதுகு உயர்ந்த ஒற்றை நாற்காலியில் அமர்ந்திருந்த டாக்டர் என்னிடம் கேட்டார்.
சொல்லுங்க.. இப்பல்லாம் உங்களுக்கு அடிக்கடி அதே கனவுகள் வருதா.. இன்னமும் பயந்து பயந்து முழிச்சிக்கிறீங்களா..
பல மாதங்களாகவே எனக்கு அதிகப்படியான மனச்சோர்வு உண்டாக ஆரம்பித்திருந்தது. அப்படி மனச் சோர்வு வந்துவிட்டால் உடனே எனக்குப் பேச்சடைத்துப் போய்விடும். அதாவது நான் பேச வேண்டும் என்று நினைத்தாலும் கூட என்னால் வாய்திறந்து பேச முடியாது. அதனால் என்னைப் பலர் ரொம்ப திமிர்பிடித்தவன் என்று காதுபடவே பேச ஆரம்பித்தார்கள். அது என்னுடைய மனச் சோர்வை மேலும் அதிகரித்தது. ஒரு கட்டத்தில், எனக்குப் பேசுவது என்பதே மறந்துவிடுமோ என்று எண்ணுமளவுக்கு என் மனச்சோர்வுகள் உண்டாவது அதிகரித்தன.
இப்படி ஆவதற்கெல்லாம் முன்பொரு நாள் நான் என்னுடைய நண்பர் ஒருவர் வீட்டுக்குப் போயிருந்தேன். அன்றைக்கு நண்பர் வீட்டில் விருந்தாளிகள் வந்திருந்தார்கள். அவர்கள் நண்பரின் அக்காவும் அவரது கணவரும் என்று பேசுகையில் தெரிந்து கொண்டேன். அந்த நண்பருடைய அக்காவின் கணவர் வருடக்கண்ணகில் வீட்டில் யாரிடமும் எதுவுமே பேசுவதே இல்லையாம். இத்தனைக்கும் அவர் பிறவி ஊமையெல்லாம் இல்லை. நடுவில் ஏற்பட்ட ஒரு விபத்திலோ அல்லது வேறேதாவது ஒரு அதிர்ச்சியினாரோ எல்லாம் அவர் தன் பேசும் சக்தியை இழக்கவில்லை. ஆனாலும் எப்போதும் மௌனமாகவே இருப்பாராம்.
இராணுவத்தில் எல்லையில் பல வருடங்களாக பாரா ட்யூட்டி பார்த்திருக்கிறார். ஒரே போஸ்ட்டில்( அதாவது ஒரே இடத்தில்). அவருடன் இன்னொருவரும் அங்கே ட்யூட்டியில் இருந்திருக்கிறார். அந்த இருவரும் அவர்களுக்குள்ளேயே மணி நேரங்களைப் பிரித்துக் கொண்டும், ஒருவர் தூங்கும் பொழுது இன்னொருவர் விழித்துக் கொண்டும் காவல் காக்க வேண்டும்.
இராணுவத்தின் தொலைதொடர்பு கருவி தவிர வேறு சத்தமே கேட்காத மௌனம். அதுவும் எப்போவது தான் கொர் கொர் என்று சத்தம் மட்டும் போடும். ஆரம்ப நாட்களில் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்களாம். நாளாக நாளாக அவர்களிடையேயும் பேச்சே இல்லாமல் மௌனமாகிப் போய்விட்டார்கள். இருபத்தி நான்கு நேரமும் வெறும் மௌனம். மௌனம்.மௌனம். மௌனம். தலையசைப்பில் கையசைப்பில் தான் சம்பாஷனைகள்.
வருடத்துக்கு பதினைந்து நாட்கள் விடுப்பில் வரும்போது கொஞ்சம்போல பேசுவாராம். மீண்டும் அடுத்த ஒரு வருடத்துக்கு மௌனம். இப்படி வருடக்கணக்காக மௌனத்திலேயே இருந்து இருந்து பணி பூர்த்தி ஆகி வந்த பின்னரும் வருடத்தில் பதினைந்து நாட்கள் தான் கொஞ்சம் போல பேசுவாராம். மற்ற நாட்கள் எல்லாம் சுத்த மௌனம் தானாம்.
எனக்கு மனச்சோர்வு வந்தபோது அந்த அக்காள் கணவரின் கதை நினைவுக்கு வந்து மேலும் பயங்காட்டிவிட்டுப் போகும். அந்த நண்பரின் பரிந்துரையின் பேரில்தான் இந்த க்ளினிக்கல் சைக்காலஜி டாக்டரிடம் நான் மாதமொருமுறை என பல மாதங்களாக வந்து பேசிவிட்டுப் போகிறேன்.
பழக்கமில்லாத புதிய நபர்களிடம் பேச ஆரம்பிக்கிற மாதிரியான சம்பிரதாயமான உரையாடல்களுடன் ஆரம்பித்தது இந்த கவுன்ஸிலிங். இந்த டாக்டரிடம் வந்து சேர்ந்ததற்கு நண்பரின் பரிந்துரையையும் தாண்டி அவர் ஒரு பெண் மருத்துவராகவும் இருந்தது கூடுதல் காரணம்.
எல்லா சைக்காலஜி மருத்துவர்களைப் போலவே இந்த மருத்துவரும் என்னிடம் தோண்டித் தோண்டி பல கேள்விகளைக் கேட்டு நானும் பதில் சொல்லி சொல்லி என்னைப்பற்றி, என்னுடைய வாழிடச் சூழ்நிலகளைப் பற்றி என என்றைப்பற்றி ஏட்டூஇஸட் அறிந்து கொண்டுவிட்டார். நானோரு பூனை வளர்ப்தெல்லாம் அவருக்குத் தெரியும்.
அப்போது தான் நள்ளிரவுகளில் எனக்கு தொடர்ந்தாற்போல வரும் அந்த கனவுகளைப் பற்றி அவரிடம் நான் சொல்லியிருந்தேன்.
எல்லா கனவுகளிலும் நான் வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு நபர்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பேன். திடீரென்று ஒரு புலி வந்து என் மீது பாய்ந்து தன் முன்னங்கால் நகங்களினால் என்னை அடித்து கொன்று போடும். உடனே நான் பதறியடித்துக் கொண்டு தூக்கத்தில் இருந்து எழுந்து கொள்வேன்.
இப்படித்தான் எனக்கு கனவுகள் வருவதும் நான் இரவு தூக்கத்திலிருந்து விழிப்பதும் அடிக்கடி நடந்து கொண்டிருந்தது. அந்தக் கனவுகளைப் பற்றித் தான் கேட்டார் மருத்துவர்.
சொல்லுங்க.. இப்பல்லாம் உங்களுக்கு அடிக்கடி அதே மாதிரி புலி அடித்துக் கொல்கிற
கனவுகள் வருதா.. இன்னமும் பயந்து பயந்து முழிச்சிக்கிறீங்களா..
நான் உடனே பதில் சொல்லாமல், மூடியிருந்த என் கண்களை விழித்து அந்த டாக்டரின் அறையின் விட்டத்தைப் பார்த்தேன். அங்கே என்ன பதிலா இருக்கிறது.. பார்த்து சொல்வதற்கு. என்ற எண்ணம் வந்தவுடன் மீண்டும் கண்களை மூடினேன்.
கொஞ்சம் குறைஞ்சிருக்குன்னு நெனைக்கேன் டாக்டர். நீங்க சொன்ன மாதிரி இப்பல்லாம் மூனு மாசத்துக்கொரு முறை ஷேடோவை (Shadow- நான் வளர்க்கும் பூனையின் பெயர்.) க்ளினிக்கல் மேட்டிங்க்குக்கு கொண்டு போய் விட்டுட்டு, திரும்ப கூட்டிட்டு வந்துர்றேன்..அதுக்கப்புறம் தான் அந்த கனவுகள் வர்றது குறைஞ்சிருக்கு.
நான் சொன்னேன் இல்லையா. உங்களோட கனவுகளுக்கும் மனச் சோர்வுக்கும் காரணமே அந்தப் பூனை தான் காரணம். அதை நீங்க சரியான நேரத்துல இணை சேர விடலை. பொதுவா ஆண் பூனைகளுக்கு அந்த தேவை வர்றப்பல்லாம் அவை பயங்கரமா சத்தமெழுப்பி பக்கத்திலிருக்கும் பெண் பூனைகளுக்கு தன்னோட தேவையை வெளிப்படுத்தும். அதைத் தான் உங்க ஷேடோவும் செஞ்சுருக்கு. நீங்க அது என்னவோ தேவையில்லாம கத்துதுன்னும், அந்த ஓலச் சத்தம் உங்களைத் தொந்தரவு பண்ணதுன்னும் நினைச்சு அதைச் சத்தம் போட்டு அடக்கி வைச்சிருக்கீங்க. ஆனாலும் இப்படி வாழ்நாள் பூரா ஒரு பூனையை இப்படி அதோட ஆதாரத் தேவையைக் கூட பூர்த்தி பண்ண விடாம அடைச்சி வைச்சருக்கோமேன்னு ஒரு கில்ட் உங்களுக்கு இருந்துட்டே வந்திருக்கு.
அதனால தான் அந்தப் பூனை உங்களை கர்ஸ் பண்ணியிருக்குன்னு நீங்களே உங்களோட கில்ட்டுக்கு ஒரு காரணம் கற்பிச்சுக்கிட்டு இருந்துருக்கீங்க. இனிமே கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் சரியாயிடும். சரியான நேரத்துக்கு அதை இணை சேர கூட்டிட்டுப் போறதை மட்டும் நிறுத்த வேணாம்.
இன்னைக்கு உங்க நேரம் முடிஞ்சுருச்சு. நாம அடுத்த மாசம் செகன்ட் சேட்டர்டே சந்திக்கலாம். என்றார் மருத்துவர்.
நான் எழுந்து வீட்டிற்கு போனேன்.