top of page

ரோனின்

குறுங்கதை

ரோனின்

என்னைப் பார்க்க வராதே என்று எத்தனை முறை உனக்குச் சொல்வது. திரும்பத் திரும்ப என்னைத் தேடிவந்து ஏன் தொல்லை பண்ணுகிறாய். நான் தான் உன்னைப் பிடிக்கவில்லை உன்னுடன் வாழப் பிடிக்கவில்லை என்னை விட்டு எங்காவது தொலைந்து போ என்று சொல்லிவிட்டேனே. உனக்கு ஏன் அது புரியவே மாட்டேன் என்கிறது..

என்னுடைய மனைவியை நான் அவளுடைய அலுவலகத்துக்கு தேடிப் போன போது அலுவலக கேண்டினில் ஒரு மூலை மேஜை நாற்காலியில் அமர்ந்து மெல்லிய குரலில் கேட்டாள். அல்லது திட்டினாள்.

நீயில்லாமல் வாழும் இந்த வாழ்க்கை தான் எனக்கு நிம்மதியைத் தருகிறது. அதையும் கெடுக்கவென்று அவ்வப்போது வந்துவிடுகிறாய். இன்னும் இரண்டு நாட்களாவது ஆகிவிடும் உன்னை என் தலையிலிருந்து இறக்கியெறிய. அப்படி என்ன தான் வேண்டும் உனக்கு.

நாங்கள் பிரிந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டன. முறைப்படி விவாகரத்து ஆகவில்லை என்றாலும் ஒரே கூரையினடியில் இல்லை இப்போது.

அதற்கு முன்னர் பதினோரு ஆண்டுகள் ஒன்றாய் இருந்தோம். அவற்றில் அவள் முதல் மூன்று வருடங்கள் மட்டும் தான் அவள் சந்தோசமாக இருந்ததாக அவள் அடிக்கடி என்னிடம் சொல்வதுண்டு. மீதியெல்லாம் ஒப்புக்கும் சப்புக்குமான ஒரு வாழ்க்கை தான் என்றும் சொல்வாள்.

நான் எப்போதுமே அதிகமாக பேசுவதில்லை. கல்யாணத்துக்கு முன்னாலும் சரி.. இப்போது அவளைப் பிரிந்து போன பின்னாலும் சரி.

முதன்முதலில் அவளுக்கு கோபம் வந்த போது அவள் சொன்னாள்.. " இப்படி சொன்னதையெல்லாம் செக்கு மாடு மாதிரி செய்து தருவதற்கு மட்டும் தான் ஆள் வேண்டும் என்றால் நானொரு வேலைக்காரனை வைத்துக் கொண்டிருப்பேனே. கல்யாணம் செய்து கணவன் என்று ஒருவன் எதற்கு.. " என்பதைப் போலத்தான் ஒரு சண்டை போட்டாள்.
அது நான்காவது வருடத்திலோ அல்லது ஐந்தாவதிலோ என்று நினைக்கிறேன். அதற்குப் பின்னால் அடிக்கடி அவள் என்னுடன் சண்டை பிடித்தாள்.

அப்புறம் ஒரு நாள், உன்னிடம் தானே சண்டை போடுகிறேன் ஏன் பதிலுக்குக் கூட சண்டையிடுவதில்லை நீ .. எப்போதுமே எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேச மாட்டேன் என்கிறாய். இப்படி எதிராளி வாய்மூடி மௌனமாகவே இருந்தால் சண்டை போடுவதில் என்ன அர்த்தமிருக்கிறது என்றும் கூட ஒரு சண்டை போட்டாள். அப்போதும் , எப்போதும் போலவே நான் மௌனமாகவே இருந்தேன். அவள் தன்னாலேயே ஓய்ந்தும் போனாள்.

இன்னொரு நாள் "இதெல்லாம் ஒரு வீடா.. வீடென்றால் சின்னச் சின்ன பேச்சுச் சத்தமாவது இருக்க வேண்டாமா.. மயானத்தில் கூட எரிகிற சத்தம் கூகைகளின் சத்தமென்று அவ்வப்போது ஒன்றிரண்டு சத்தங்களாவது கேட்கும். சத்தமே இல்லாத வீட்டில் எப்படி மனிதர்கள் வாழ்வது" என்று சண்டை போட்டாள். அப்போதும் நான் பேசாமலேயே இருந்தேன்.

இப்படி நிறைய நிகழ்வுகளுக்குப் பிறகு தான் இருவரும் ஆளுக்கொரு திசையில் பிரிந்து போனோம். இரண்டு ஆண்டுகளாய் நானும் அவளைப் பார்க்கப் போகமல் தான் இருந்து அப்புறம் தான் அவளைத் தேடிப் போனேன். தேடிப்போகும் போதெல்லாம் ஒரே கேள்வி தான் கேட்கிறாள்.

ஏன் என்னைத் தேடித் தேடி வருகிறாய்

என்று.. ஒரு நாளும் பதில் சொல்லாத நான் இன்றைக்கு மெல்லச் சொன்னேன்..

இந்த இரண்டாண்டு கால ரோனின் வாழ்க்கை எனக்குப் போதும். சாமுராய் என்றால் அவனுக்கு ஒரு மாஸ்டர் கட்டாயம் தேவை. வேறு யாரையும் மாஸ்டராக ஏற்றுக் கொள்ள என்னால் முடியவில்லை.

இப்படிச் சொன்ன என்னை விநோதமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, அவள் கேண்டினை விட்டு வெளியே போனாள்.

என்னை அவர்கள் அலுவலக வளாகத்திற்குள் அன்றைக்கப்புறமாய் நுழையக் கூட விடவேயில்லை.

CONTACT

Tel: 9810488582| Tel: 7011144631 | sureshbarathan@gmail.com

Sign Up for Stay Connected

Thanks for submitting!

Follow me:

  • Black Facebook Icon
  • Black Twitter Icon

© 2022 by Suresh Barathan

bottom of page