விடாமல் துரத்தும் பூதம்

என்னை சமீபத்தில் கொஞ்ச நாட்களாய் நான் போகும் இடத்துக்கெல்லாம் விடாமல் பின் தொடர்ந்து ஒரு பூதம் துரத்திக் கொண்டே வருகிறது. நான் என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் அது என்னை விட்ட பாடில்லை.
நான் எந்தவொரு அற்புத விளக்கையும் கண்டெடுக்கவும் இல்லை. அதை பரபரவென்று தேய்க்கவும் இல்லை. ஆனாலும் என் முன்னே அந்த மாய பூதம் வந்து தோன்றிவிட்டது. அதனிடம் கேட்டுப் பெறுவதற்கு எனக்கென எந்த விருப்பங்களும் அப்போதைக்கு இல்லை. அதனால் நீ போய் விட்டு சாகவாசமாய் பின்னோரு நாளில் வாவென்று அதை விரட்டிக் கூடப் பார்த்துவிட்டேன்.
ஒரு முறை நான் வெளியே வந்து யார் முன்னராவது தோன்றிவிட்டால், கண்டிப்பாக அவருக்கு நான் மூன்று வரங்களைத் தந்தே தீர வேண்டும். உனக்கு வரங் கொடுக்காமல் நான் இவ்விடத்தை விட்டு நகரமாட்டேன். இப்போதைக்கிப்போதே உனக்குத் தேவையே இல்லாவிட்டாலும் கூட எதையாவது கேள் என்று பிடிவாதம் பிடித்தது அந்தப் பூதம்.
இதென்னடா தொல்லையாப் போச்சு என்று சலிப்போடு அதைப் பார்த்தேன். எனக்குத் தான் ஒன்னுமே வேண்டாங்கிறேன்ல்ல என்று கோபமாய்க் கத்திக் கூடப் பார்த்துவிட்டேன். பூதம் விடவே இல்லை. அது என்னிடம் பல ஆசைகளைக் காட்டிப் பார்த்தது.
வேண்டுமானால் உனனை நான் இந்த ஊரிலேயே பெரிய பணக்காரனாக்கி விடட்டுமா
வேண்டாம்ப்பா. நான் ஒரு அரசு உத்தியோகஸ்தன். மாசாமாசம் சுமாரா சம்பளம் கொடுக்கிறார்கள். போதாததுக்கு வருடாவருடம் எனக்கு ஒரு மூன்று சதவீதம் இன்க்ரிமென்ட் கொடுப்பார்கள். தவிரவும் ஆறு மாசத்திற்கொரு முறை பஞ்சப்படியும் ஒன்றோ இரண்டோ சதவீதம் கொடுப்பார்கள். அப்படிக் கொடுக்கும் கொஞ்சூண்டு பணத்திற்கே அரசாங்கத்துக்கு கொள்ளை கொள்ளையாய் இன்கம்டாக்ஸ் கட்ட வேண்டியருக்கிறது. இந்த சூழ்நிலையில் நீ வேற நெறைய பணங்கொடுத்தேன்னா அதுல பேர் பாதி வரியாகவே கட்ட வேண்டியதாய் இருக்கும். ஆகவே வேறு ஏதாவது யோசனை இருந்தால் சொல்லு பார்ப்போம் என்று சொன்னேன்.
பூதம் தன் கன்னத்தில் கையைத் தேய்த்துக் கொண்டு பிரசவ வார்டின் வராண்டாவில் முதன் முறைத் தகப்பனாகப் போகிறவன் நடப்பதைப் போல குறுக்கும் நெடுக்கும் நடந்தது.
பூதம்.. நீ நிதானமாக யோசித்துக் கொண்டிரு. நான் அந்த டாக்ஸ் ஈ-ஃபைலிங் வெப் சைட்டில் என்னுடைய பாஸ்வேர்டை மறந்து விட்டேன். அதை சரி பண்ணிக் கொண்டு வருகிறேன்.
ஆ.. நல்ல யோசனை.. நான் வேண்டுமானால் உனக்கு நீ மறந்து போன அந்த உன் பாஸ்வேர்டை ஞாபகப்படுத்தட்டுமா..
ஏய்.. நீ நெஜம்மாவே பூதந்தானா.. எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு. இப்படி தரை ரேஞ்சுக்கெல்லாம் இறங்கி வந்துட்ட நீ.. நான் அப்படி என்ன பெரிசா பாஸ்வேர்டு வைச்சிருக்கப் போறேன்னு நினைக்கிற நீ.. சுரேஷ்123 இல்லைன்னா 123சுரேஷ் ன்னு இதைத்தான் வேற வேற காம்போவில வைச்சிருப்பன். பத்து பதினைஞ்சு தரம் மாத்தி மாத்திப் போட்டுப் பாத்தா வெப்சைட் தெறந்துட்டுப் போவுது.. இதுக்காக யாராச்சும் ஒரு விஷ்ஷை வேஸ்ட் பண்ணுவானா.. போ.. போ.. வேற எதுனாச்சும் யோசிச்சுட்டு வந்து சொல்லு.
பூதத்திற்கு சப்பென்று ஆகிவிட்டது. இப்ப உனக்கு எதுனா மூணு வரம் கொடுத்தே ஆகனுமே.. யப்பா யப்பா எதுனா கேட்டு வாங்கிக்கோப்பா.. ராசால்ல.. என் கண்ணுல்ல..
பூதம் என்னிடம் காலில் விழாத குறையாய் கெஞ்சத் துவங்கியது. நான் பூதத்திடமிருந்து ஓடத் தொடங்கினேன். அது என்னை துரத்தத் தொடங்கியது.
இப்படித்தான் அந்தப் பூதம் இன்று வரை என்னைத் துரத்திக் கொண்டே இருக்கிறது.